ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் 14-வது ஆண்டாக நடைபெற்ற ஆன்மிக நிகழ்வில் திரளான பெண்கள் பங்கேற்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் ஆலயத்தில் உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி, அமைதியுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், 1008 திருவிளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜை நடைபெற்றது.
அமராவதிபுதூரில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி மற்றும் திருவாடானை ஸ்ரீ சாரதா சேவா சமிதி இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி, உலக நன்மைக்காக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 14-வது ஆண்டாக நடைபெற்ற இந்த ஆன்மிக விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
விழாவையொட்டி ஆலய வளாகத்தில் 1008 திருவிளக்குகள் முறைப்படி அமைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் தீப வழிபாடுகள் நடைபெற்றன. திருவாடானை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி, உலக அமைதி, மக்கள் நலன் மற்றும் குடும்ப வளம் வேண்டி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியின் நிர்வாகிகள், பேராசிரியர்கள், மத்திய அரசு வழக்கறிஞர் சௌந்தர பாண்டியன், ராமேஸ்வரம் நெய்தல் அறக்கட்டளை நிறுவனர் நமோ சிவகுமார், திருவாடானை ராமரத்தினம், அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சாரதா சேவா சமிதி மற்றும் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பூஜை நிறைவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.




You must be logged in to post a comment.