பராமரிப்பின்றி கழிப்பறை, திறந்த நிலையில் உள்ள ஆபத்தான கிணறு, மதுபிரியர்களின் கூடாரமாக மாறிய கழிப்பறை – மீனவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அவதி; மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கடற்கரை ஜெட்டி பாலம் அருகே நகராட்சி நிர்வாகத்தால் மக்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறை தற்போது முழுமையாக பாழடைந்து, பராமரிப்பின்றி கிடப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கழிப்பறையின் கதவுகள், உபகரணங்கள், தண்ணீர் வசதிகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்டு உபகரணங்கள் துருப்பிடித்த நிலையில் பயன்படுத்த முடியாமல் உள்ளன. மேலும், கழிப்பறையின் பின்புறம் கிணறு எந்தவித பாதுகாப்பும் இன்றி திறந்த நிலையில் இருப்பதால், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை உடனடியாக சீரமைக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், பராமரிப்பின்றி கிடக்கும் இந்தக் கழிப்பறை தற்போது மதுபிரியர்களின் கூடாரமாக மாறியுள்ளதாகவும், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடற்கரை ஜெட்டி பாலம் பகுதி முழுவதும் மீனவத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தினமும் அதிகாலை கடலுக்கு செல்லும் மீனவர்கள், பாசி சேகரிப்பு உள்ளிட்ட கடல் சார்ந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலர் இப்பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பொதுக் கழிப்பறை செயல்படாததால் அடிப்படை சுகாதார வசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
அதேபோல், மாலை நேரங்களில் கடற்கரையை ஒட்டி ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஏராளமானோர் இளைப்பாறுவதற்காகவும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இப்பகுதிக்கு வருவதாலும், இளைஞர்கள் மீன்பிடி தூண்டில் போட்டு அமருவதாலும் இந்த இடம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் அவசர தேவைக்காக பயன்படுத்தக்கூடிய கழிப்பறை இல்லாததால் மிகுந்த மனவேதனையுடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
“மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கழிப்பறையை பராமரிக்கத் தவறிய நகராட்சி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாழடைந்த கழிப்பறையை உடனடியாக சீரமைத்து, பாதுகாப்பு வசதிகளுடன் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என்ற கோரிக்கை மீனவ மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடி கவனம் செலுத்தி, திறந்த நிலையில் உள்ள ஆபத்தான கிணற்றை பாதுகாப்புடன் மூடுவதோடு, கழிப்பறையை நவீன வசதிகளுடன் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.







You must be logged in to post a comment.