செம்பட்டி அருகே கோவில் பாதை விவகாரம். ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.
செம்பட்டி அருகே கோவில் பாதை விவகாரத்தில் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஒரு தரப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே வடக்கு மேட்டுப்பட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் புனித அந்தோனியார் தேர் வடக்கு மேட்டுப்பட்டி கிராமத்தை சுற்றி வருவது வழக்கம். இதில், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் தேர் சுற்றி வருவது கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த ஊரை சுற்றி தேர் வரும் போது விவசாய நிலங்களாக இருந்தாலும் அதன் உரிமையாளர்கள் அனுமதிப்பது வழக்கம். இந்நிலையில், தேர் சுற்றி வரும் நிலத்தை தனியார் ஒருவரிடம் புதிதாக விலைக்கு வாங்கிய நபர் பட்டா போட்டு கம்பி வேலி அமைத்துள்ளார். ஆனால், அக்கிராம மக்கள் திருவிழாவின் போது தேர் வரும் பாதையை சம்பந்தப்பட்ட நிலத்தில் உரிமையாளர் வேலி அமைத்துள்ளதால், அதனை அகற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், ஆத்தூர் வட்டாட்சியர் உள்ளிட்ட பலரிடம் மனு அளித்துள்ளனர்.
ஆனால், நிலத்தை விலைக்கு வாங்கிய தனிநபர் தனக்கு சொந்தமான நிலத்தில் வேலி அமைத்துள்ளதால், திருவிழா காலங்களில் புனித அந்தோணியார் தேர் வருவதற்கு அனுமதிக்க மாட்டோம். தேர் மாற்று வழியில் செல்ல வேண்டுமென, சம்பந்தப்பட்ட நிலத்தில் உரிமையாளர் கூறியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுரேஷ்குமார் தலைமையில், நிலத்தின் உரிமையாளர் தரப்பு மற்றும் கிராம பொதுமக்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பேச்சுவார்த்தை காலதாமதமாகவும், உடன்பாடு ஏற்படாததாலும் கிராம பொதுமக்கள் சார்பில் ஒரு தரப்பினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் செம்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் கோட்டைராஜ் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், இப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, திருவிழா நாட்களில் தேர் செல்வதற்கு, சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் தரப்பினர் அனுமதித்துள்ளதால், வடக்கு மேட்டுப்பட்டி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.




You must be logged in to post a comment.