திண்டுக்கல் மாவட்டம் பழனி சின்னப்பள்ளிவாசலில், தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் காயிதே மில்லத் அவர்களின் 131-வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி சின்னப்பள்ளிவாசல் இமாம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர், காயிதே மில்லத் அவர்களின் அரசியல், சமூக, கல்வி பணிகள் மற்றும் நாட்டிற்காக அவர் ஆற்றிய சேவைகள் குறித்து நினைவுகூரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, அவரது மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமைக் கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து நிர்வாகிகள் உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து, பள்ளிவாசலுக்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு தவெக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் இக்பால் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் மிதுன் மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர்கள் நாகராஜ், முகமது இஸ்மாயில் சேட், நிவாஸ் தீன், அப்பாஸ், இத்ரீஸ் மற்றும் முகமது ஆசிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
மேலும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளான காங்கிரஸ் கட்சியின் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் பர்வேஸ் அலி அகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகரத் தலைவர் காஜா மைதீன் உள்ளிட்டோரும் பங்கேற்று காயிதே மில்லத் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
சமூக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தவெக பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.