25 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ரத்தக்காடாக மாறிவரும் தமிழ்நாடு! எகிறிய எடப்பாடி பழனிசாமி..

ரத்தக்காடாக மாறிவரும் தமிழ்நாடு! எகிறிய எடப்பாடி பழனிசாமி..

எழுதியவர்: Askar May 25, 2026, 5:52 pm

சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும், உங்களுக்கு வாக்களித்த மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்றும் முதல்வர் விஜய்க்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார். மேலும், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் ஒருவார்த்தையாவது பேசுவார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இது குறித்து எடப்பாடி கே.பழனிசாமி தனது எக்ஸ் தள பதிவில், “மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த த.வெ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

மேலும், தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி கைது செய்யப்படுள்ளதாகவும், திருவொற்றியூரில் நள்ளிரவில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி அச்சுறுத்தி ஆளும் த.வெ.க.வினர் மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன.

மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று மழை பெய்த நிலையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்திருந்தது. இன்று காலை ஓமலூரில் உள்ள இரயில்வே சுரங்கப் பாதையை காரில் கடக்க முயன்ற கணவன் மனைவி இருவரும் அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை இந்த அரசு உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாததால் இன்று நாம் இரண்டு விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.

சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் வசனம் பேசினார். ஆனால் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன.

மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த த.வெ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

அதுபோக, ஆளுங்கட்சியினரின் மிரட்டல் அராஜகங்கள், குறிப்பாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு என்பது தொடர்கிறது. முந்தைய ஆட்சிபோல் தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர் தான் இப்போதும் வாய்த்துள்ளார். ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது. அவ்வளவு தான்.

‘முதல்வர் கோட்டைக்கு வருகிறார்! கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்! ஆஹா என்ன ஒரு மாற்றம் ?’ என்று ஒரு தனி உலகத்தை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் ஒருவார்த்தையாவது பேசுவார்களா? உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று இந்த முதல்வரை வலியுறுத்துகிறேன்.” என்று அவர் கூறியிருக்கிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!