சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் அமோக வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க தலைவர் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இந்தத் தேர்தலில் தி.மு.க 59 இடங்களையும், அ.தி.மு.க 47 இடங்களையும் பெற்றன. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பின் அ.தி.மு.க இரண்டாக உடைந்தது.
சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ-க்களும், தவெக அரசுக்கு ஆதரவாக சி.வி. சண்முகம் தரப்பு 25 எம்.எல்.ஏ-க்களும் செயல்பட்டனர். இதனால் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கினார்.இன்று காலை, கொறடா மற்றும் சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் சந்தித்துப் பேசினர்.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், எஸ்பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), ஜெயக்குமார் (பெருந்துறை தொகுதி), சத்யபாமா (தாராபுரம் தொகுதி) ஆகிய மூவரும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்வதற்கான அதிகாரப்பூர்வ கடிதங்களை வழங்கினர். இந்த ராஜினாமாவை அடுத்து, சட்டப்பேரவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் பலம் 44 ஆகக் குறைந்துள்ளது.
பதவிகளை ராஜினாமா செய்த கையோடு, 3 முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் தலைமைச் செயலகத்திற்கு சென்று த.வெ.க அமைச்சரான ஆதவ் அர்ஜுனாவை நேரில் சந்தித்தனர். அவர்கள் மூவருக்கும் பொன்னாடை போர்த்தி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முறைப்படி த.வெ.க-விற்குள் வரவேற்றார்.சந்திப்பின்போது முன்னாள் எம்.எல்.ஏ சத்யபாமா, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்த 15 நாட்களிலேயே ‘அம்மாவின்’ (ஜெயலலிதா) ஆட்சியைப் பார்ப்பது போல உள்ளது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சர் விஜயை நம்பி நீங்க வந்திருக்கிறீர்கள். இனி எல்லாம் நல்லதே நடக்கும்; நாம் ஒரே குடும்பமாகப் பயணிப்போம் என உறுதி அளித்துள்ளார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்த மூவரும், இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திக்கவுள்ளனர். ராஜினாமா செய்துள்ள மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய மூவரும் விரைவில் நடைபெறவுள்ள திருச்சி கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும் தங்களின் சொந்தத் தொகுதிகளின் இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களாகவே களம் இறங்குவார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பலமாக எதிர்பார்க்கப்படுகிறது.




You must be logged in to post a comment.