சுரண்டை அருகே உள்ள இடையர்தவணை பகுதியில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பி தாக்கி எருமை மாடுகள் மற்றும் ஆடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் இடையர்தவணை, கன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த M. கண்ணன் (த/பெ. K. முருகேசன்) என்பவரின் தந்தை, அப்பகுதியில் உள்ள பாலத்தில் மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளார். கடந்த வியாழக்கிழமை (08-10-2026) மாலை 5 மணியளவில் மழை பெய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின்சாரக் கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி மாடுகள் மற்றும் ஆடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.
இச்சம்பவம் குறித்து மின்வாரிய செயற்பொறியாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயியின் ஏழ்மையைப் பயன்படுத்தி மின்வாரிய அதிகாரி ஏமாற்றி விட்டதாகக் கூறி, இச்சம்பவம் குறித்து துறைரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் மாவட்ட ஆட்சியர் நேரடியாகத் தலையிட்டு, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாடு மேய்க்கும் விவசாயிக்கு கருணை அடிப்படையில் உடனடியாக நிவாரணத் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.