17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காஞ்சிரங்குடி கிராமத்திற்கு பேருந்து இயக்கத்தில் அலட்சியம்!

காஞ்சிரங்குடி கிராமத்திற்கு பேருந்து இயக்கத்தில் அலட்சியம்!

எழுதியவர்: Baker BAker October 13, 2026, 7:55 am

5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு – பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த எச்சரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சிப் பகுதிகளில் அரசுப் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால், 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

காஞ்சிரங்குடி பகுதிக்கு இயக்கப்படும் 17-ஆம் எண் அரசுப் பேருந்துகள் உரிய நேரங்களில் இயக்கப்படாததால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் அன்றாடத் தேவைகளுக்காக வெளியிடங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, குறித்த நேரத்தில் பேருந்துகள் கிடைக்காததால் மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கும், பணிக்குச் செல்வோர் தங்களது பணியிடங்களுக்கும் உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

பேருந்து சேவையை உடனடியாகச் சீரமைத்து, அனைத்து நேரங்களிலும் முறையாகப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், காஞ்சிரங்குடி விளக்குப் பகுதியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

பேருந்து போக்குவரத்துப் பிரச்சினையுடன், அப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சாலை வசதிகள் தொடர்பான குறைபாடுகளுக்கும் தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, பொதுமக்களின் அன்றாடத் தேவைகளையும் மாணவர்களின் கல்வி நலனையும் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்துத் துறையும் உடனடியாகத் தலையிட்டு காஞ்சிரங்குடி ஊராட்சிப் பகுதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!