ஆக்கிரமிப்பு, குப்பைக் கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு – பத்தனேந்தல் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!
இராமநாதபுரம் மாவட்டம் பத்தனேந்தல் கிராமத்திற்குச் சொந்தமான கண்மாயில் ஆக்கிரமிப்பு, குப்பைகள் கொட்டுதல் உள்ளிட்ட செயல்களால் நீர்நிலையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தக் கண்மாயை நம்பி சுமார் 375 ஏக்கர் நஞ்சை விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், பத்தனேந்தல், சின்னசம்பை, மேட்டுக்கொல்லை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், பொதுப் பயன்பாட்டிற்கும் கண்மாய் நீரைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கண்மாயில் மேட்டுக்கொல்லை கிராமத்தினர் மூன்று கோவில்களைக் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், கரையிலிருந்து சுமார் 5 மீட்டர் தொலைவில் மரங்களை நட்டு, மண் கொட்டி ஆண்டுதோறும் கண்மாய் பரப்பைச் சிறிது சிறிதாக ஆக்கிரமித்து வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்படும் பாதைகளில் குப்பைகள் கொட்டப்படுவதுடன், உரிய அனுமதியின்றிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் நீர்வரத்துப் பாதிப்பதோடு, சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, கண்மாயின் உண்மையான நிலையை உறுதி செய்து, ஆக்கிரமிப்புகள் மற்றும் குப்பைக் கொட்டுதல் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
375 ஏக்கர் விவசாய நிலங்களின் வாழ்வாதாரத்தையும், பொதுமக்களின் நீராதாரத்தையும் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் பிரதான கோரிக்கை
யாக உள்ளது




You must be logged in to post a comment.