17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை கோவையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்க ஒய்எம்சிஏ கோரிக்கை..

சென்னை கோவையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்க ஒய்எம்சிஏ கோரிக்கை..

எழுதியவர்: Abubakker Sithik October 8, 2026, 5:56 pm

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியிலிருந்து சென்னை மற்றும் கோவைக்கு ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என சுரண்டை ஒய்எம்சிஏ கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சுரண்டை ஒய்எம்சிஏ தலைவர் ஏஎஸ்ஏஆர் பாலச்சந்திரன், செய்தி தொடர்பாளர் ராஜகுமார் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தென்காசி மாவட்டம் சுரண்டை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் சென்னை, மற்றும் கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, மற்றும் ஆயுதபூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு பண்டிகைகளை கொண்டாட சொந்த ஊரான சுரண்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஆனால், சுரண்டையிலிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சுரண்டைக்கும் நேரடி அரசு பஸ் வசதி இல்லை. அதே போன்று சுரண்டையில் இருந்து கோவைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேரூந்துகள் இல்லை (அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மூலம் ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. அதிலும் முக்கிய தினங்களில் இருக்கைகள் கிடைப்பதில்லை).

ஆகவே இப்பகுதி பொதுமக்கள் பண்டிகைகளைக் கொண்டாடிவிட்டு சென்னை மற்றும் கோவைக்கு செல்ல போதிய பஸ் வசதியின்றி பல பேருந்துகள் மாறியும் அல்லது அதிகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தியும் வந்து செல்கின்றனர். இதனால் பெண்கள், முதியோர் , மற்றும் மாணவிகள் கடுமையான சிரமங்களை அடைகின்றனர்.

ஆகவே, சென்னை மற்றும் கோவை சுற்றுவட்டாரப் பகுதியில் வசிக்கும் சுரண்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சென்னை மற்றும் கோவையில் இருந்து சுரண்டைக்கு 16-10-2026 வெள்ளிக் கிழமை மற்றும் சுரண்டையில் இருந்து சென்னை மற்றும் கோவைக்கு 20-10-2026 செவ்வாய் கிழமையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (சாதாரண) சிறப்பு பேருந்துகள் இயக்கவும் அந்த பேருந்துகளுக்கு முன்பதிவு வசதி செய்து தருமாறும் அதே போன்று தீபாவளி பண்டிகை கொண்டாடவும் இரு மார்க்கத்திலும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் அதற்காகான ஆன்லைன் முன்பதிவு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

ஏற்கனவே கடந்த 15 வருடங்களாக புளியங்குடி, தென்காசி, சங்கரன் கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து முன் பதிவில்லா சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன என்பதனையும், இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பயனடைவார்கள் என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!