17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பில்லூர் அணை 94 அடியை எட்டியது: பவானி ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

பில்லூர் அணை 94 அடியை எட்டியது: பவானி ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

எழுதியவர்: Baker BAker October 8, 2026, 10:00 am

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் பவானி ஆற்றங்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அவசர வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பில்லூர் அணையின் நீர்மட்டம் தற்போது 94 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 6,000 கனஅடி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், பில்லூர் அணை அதன் முழுக் கொள்ளளவான 100 அடியை எந்த நேரத்திலும் எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை முழுக் கொள்ளளவை எட்டும் பட்சத்தில், அணைக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பவானி ஆற்றங்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ அல்லது கால்நடைகளை ஆற்றுக்கு அழைத்துச் செல்லவோ வேண்டாம் என பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் வாசுதேவன் அவர்களின் உத்தரவின்பேரில், ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நகராட்சி துப்புரவு அலுவலர் சுரேஷ்குமார், மின் மேற்பார்வையாளர் மகேஸ்வரன் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள் ஆகியோர் ஆற்றங்கரை பகுதிகளில் தீவிரமாக முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் அனைவரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறும், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!