ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், மேலவலசை–காஞ்சிரங்குடி பகுதியில் உள்ள அருள்மிகு பொன்னும் சிறை எடுத்த அய்யனார் திருக்கோவில் திருவிழாவையொட்டி, 266-வது ஆண்டு பாரம்பரிய எருதுகட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மேலவலசை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாடுபிடி வீரர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
களத்தில் சீறிப்பாய்ந்த காளைகள், அவற்றை அடக்க முயன்ற வீரர்களுக்கு போக்கு காட்டியதுடன், பிடியில் சிக்காமல் துள்ளிக் குதித்து சென்ற காட்சிகள் பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. காளைகளின் வேகத்தையும் துள்ளலையும் பொருட்படுத்தாமல், விடாப்பிடியாக அவற்றை சுற்றி வந்து அடக்கிய மாடுபிடி வீரர்கள் தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர்.
காளைகள் சீறிப்பாய்ந்த ஒவ்வொரு தருணத்திலும் பார்வையாளர்கள் ஆரவாரம் எழுப்பினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
பாரம்பரியமும் வீரமும் கலந்த இந்த எருதுகட்டு விழாவைக் காண மேலவலசை, காஞ்சிரங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.




You must be logged in to post a comment.