ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தெற்கு தெருவில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சூரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மகன் பிரேம்குமார் (24). இவர் அரிசி ரீட்டெய்லிங் நிறுவனத்தில் பணியாற்றி வருவதுடன், திருவாடானை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் ஆர்டர் எடுப்பது, பொருட்களை விற்பனை செய்வது மற்றும் வசூல் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல் பணிக்காக திருவாடானை தெற்கு தெருவுக்கு வந்த பிரேம்குமார், அங்குள்ள தனியார் மளிகைக் கடை முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகிலுள்ள கடைகளுக்கு ஆர்டர் எடுக்கச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது, வாகனம் மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
கேமரா பதிவுகளில் கிடைத்த முக்கிய தடயங்களை வைத்து விசாரணை நடத்தியதில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி டவுன் தேவர் தெரு, கணேஷ்புரம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பாண்டி (35) மற்றும் திருவாடானை எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் செந்தில்குமார் (45) ஆகியோர் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இருவர் மீதும் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவாடானையில் நடந்த பைக் திருட்டு சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது வெளியாகியுள்ள காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது




You must be logged in to post a comment.