ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது தம்பி முனீஸ்வரனை கத்தியால் குத்திய வழக்கில் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்ட தகவலின்படி, நேற்று இரவு கிருஷ்ணனுக்கும் அவரது தம்பிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், தம்பியை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த உச்சிப்புளி காவல் நிலைய காவல்துறையினர், உடனடியாக கிருஷ்ணனைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே காவல்துறையினர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணனை, தன்மீது தொடுக்கப்பட்டுள்ள தம்பியை குத்திய வழக்கு மற்றும் கைது நடவடிக்கை குறித்த அச்சம் தீவிரமாக மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. “போலீசார் தன்னை எந்நேரமும் கைது செய்வார்கள்” என்ற கடும் பீதியிலும் பயத்திலும் இருந்த அவர், யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையின் 4-வது மாடிக்குச் சென்றுள்ளார்.
அங்கு திடீரென அவர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு உண்டானது. உடனடியாக சக நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து, படுகாயமடைந்த கிருஷ்ணனை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.




You must be logged in to post a comment.