ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கண்டெய்னர் வாகனத்தில் 2 டன் ரேஷன் அரிசி கொண்டு வந்து கடலோரப் பகுதி வழியாக கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டி சுற்றுவட்டார கடற்கரைப் பகுதிகளில் மரைன் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, முள்ளிமுனை செல்லும் சாலையில் சென்ற கண்டெய்னர் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தலா 40 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் 2,000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (37), ராமநாதபுரம் மாவட்டம் புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த திருமுருகன் (35) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கண்டெய்னர் போன்ற பெரிய வாகனத்தில் ரேஷன் அரிசியை கொண்டு வந்து கடலோரப் பகுதிகளை கடத்தலுக்கான வழித்தடமாக பயன்படுத்த முயற்சிப்பது கண்டிக்கத்தக்கதாக மீனவர்களும் அப்பகுதி மக்களும் தெரிவித்துள்ளனர் .
மேலும், இந்த ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்காக கடத்தப்பட்டது, கடத்தலின் பின்னணியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடராமல் இருக்க, கடலோரச் சாலைகள் மற்றும் முக்கிய வழித்தடங்களில் போலீசார் தொடர் வாகனச் சோதனை நடத்த வேண்டும் என்றும், கடத்தல் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு மற்றும் அதிகாரிகள் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.