ராமநாதபுரம்: பட்டா வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கீழக்கரை பகுதி பெண்கள் பாரம்பரிய முறைப்படி காய்கறி, கனிகளை சீர் வரிசையாக கொண்டு வந்து வழங்கிய சம்பவம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை காஞ்சிரங்குடி குரூப்புக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நீண்ட ஆண்டுகளாக வசித்து வரும் மீனவ சமுதாய மக்கள் மற்றும் சிறு, குறு தொழில் வியாபாரிகள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, கடந்த மாதம் பொதுமக்கள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உடனடியாக கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்பேரில், கீழக்கரை வட்டாட்சியர் ராமசுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து நில அளவீடு உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தங்களது கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டதை வரவேற்ற பொதுமக்கள், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்க முடிவு செய்தனர்.
கீழக்கரையின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், பெண்கள் குழுவாக இணைந்து காய்கறிகள் மற்றும் கனிகளை தாம்பூலம் போன்று அலங்கரித்து சீர் வரிசையாக எடுத்துச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி நன்றி தெரிவித்தனர்.
சீர்வரிசையை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் முறையாக ஆய்வு செய்து பட்டா வழங்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடைபெற்ற இந்த வித்தியாசமான நன்றி தெரிவிக்கும் நிகழ்வு அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
“பல ஆண்டுகளாக எங்களது கோரிக்கையாக இருந்த பட்டா பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே இந்த பாரம்பரிய சீர் வரிசையை வழங்குகிறோம்” என பொதுமக்கள் தெரிவித்தனர்.




You must be logged in to post a comment.