ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணல் ஏற்றி வந்ததாகக் கூறப்படும் லாரி ஒன்றை போலீசார் நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாகச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து போலீசார் லாரியை பின்தொடர்ந்து சென்ற நிலையில், ஓட்டுநர் ஏ.ஆர். மங்கலம் வழியாக தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, ஏ.ஆர். மங்கலம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி அருகே லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் அப்பகுதியில் அமைந்திருந்த சிறிய கோவில் ஒன்றும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. போலீசார் லாரியை துரத்திச் சென்றபோது அது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதனிடையே, தொண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக ஆற்று மணல் கடத்தல் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக திருப்பாலைக்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி மற்றும் ஓட்டுநர் குறித்தும், மணல் கடத்தல் தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




You must be logged in to post a comment.