ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள இரட்டை ஊரணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில். இவரது 19 வயது மகன் மோனிஷ் கண்ணா. பத்தாம் வகுப்பு வரை சக மாணவர்களைப் போலச் சென்று நன்றாகப் படித்துத் தேறிய இவருக்கு, திடீரென மயங்கி விழும் விசித்திரமான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
தலையில் கோளாறு எனக் கருதி, மதுரை, சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பெற்றோர் இவருக்குத் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும், கடந்த ஆறு ஆண்டுகளாக மோனிஷ் கண்ணாவால் பேசவோ, நடக்கவோ முடியாமல், எப்போதும் மயங்கிய நிலையிலேயே படுத்த படுக்கையாக அவதிப்பட்டு வருகிறார்.
மகனின் நோயைக் குணப்படுத்த முயன்ற விவசாயி செந்தில், தங்களது வீடு, வாசல் மற்றும் வாழ்வாதாரமான நெல் வயல்கள் அனைத்தையும் விற்று பல லட்சம் ரூபாயை மருத்துவச் செலவுக்காகக் கரைத்துள்ளார். தற்போது விற்றுத் தீர்க்க வேறு சொத்துகள் எதுவும் இல்லாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவர், செய்வதறியாது தவித்து வருகிறார்.
இந்நிலையில், தனது மகனின் உயிரைக் காப்பாற்ற தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு உயர்தர மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், மாதாந்திர மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கண்ணீருடன் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு இந்தத் துயரத்தைக் கொண்டு சென்று, தங்களது ஏழை நிலை கருதி மகனுக்கு இலவச உயர்தர சிகிச்சை கிடைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெற்றோர் கதறித் தவித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.