ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்ட திருவாடானை–அத்தானி கண்மாய் பகுதிகளில் அரசு அனுமதியுடன் சவடு மண் அள்ளப்பட்டு வரும் நிலையில், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிக ஆழத்திற்கு மண் அள்ளப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசு விதிமுறைகளின்படி 3 அடி ஆழத்திற்கு மட்டுமே சவடு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சிலர் 6 அடிக்கும் மேல் ஆழத்திற்கு பள்ளம் தோண்டி மண் அள்ளி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் கண்மாய் பகுதிகளில் ஆழமான பள்ளங்கள் உருவாகி வருவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன், அருகில் உள்ள விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் என்றும் கண்மாய் கரைகள் தண்ணீரை முறையாகத் தேக்குவதில் சிக்கல் ஏற்படக்கூடும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு விதிமுறைகளின்படி மண் அள்ளப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக கண்களுக்காமல் மெத்தன போக்கில் செயல்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், திருவாடானை–அத்தானி கண்மாய் பகுதிகளில் நடைபெறும் சவடு மண் அள்ளும் பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் விதிமீறல் செய்பவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்மாய் பாதுகாப்பு, விவசாய நிலங்களின் எதிர்காலம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




You must be logged in to post a comment.