ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பரமக்குடி மற்றும் உச்சிப்புளி பகுதிகளில் அடுத்தடுத்து சுமார் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரமக்குடி எமனேஸ்வரம் காவல் நிலைய போலீசார் காந்தி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, உய்யவந்த அம்மன் கோவில் பின்புறம் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோவில் 7-வது தெருவைச் சேர்ந்த கோகுல் (24) என்பவரை சோதனை செய்தனர். அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
இதேபோல், உச்சிப்புளி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெருங்குளம் பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வாணியன்குளம் பழைய வாட்டர் போர்டு கட்டடம் அருகே போலீசாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்ற பெருங்குளத்தைச் சேர்ந்த பவின் என்பவரை பிடித்து சோதனை செய்ததில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அவரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.
இரண்டு சம்பவங்களிலும் மொத்தம் சுமார் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா பறிமுதல் சம்பவங்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்றதாகக் கூறப்படும் மிகப்பெரிய கஞ்சா பறிமுதல் சம்பவங்களும் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் உச்சிப்புளி அருகே 290 கிலோவும், புதுமடம் அருகே 292 கிலோவும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதனால், கஞ்சாவை பறிமுதல் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், மாவட்டத்திற்குள் கஞ்சா கொண்டு வரும் முக்கிய விநியோக நபர்கள், பதுக்கல் இடங்கள் மற்றும் விற்பனைக்கு பின்னால் செயல்படும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் சென்றடைவதைத் தடுக்க காவல்துறை மட்டுமின்றி வருவாய், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளையும் ஒருங்கிணைத்து அரசு தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.




You must be logged in to post a comment.