17 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் அருகே சோகம்: அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி; இருவர் படுகாயம்!

ராமநாதபுரம் அருகே சோகம்: அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி; இருவர் படுகாயம்!

எழுதியவர்: Baker BAker October 4, 2026, 4:29 pm

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற சக மாணவர்கள் இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

​ராமநாதபுரம் சின்னக்கடை தெருவைச் சேர்ந்தவர்கள் முகமது அசன், முகமது பகது மற்றும் ஹர்ஷத். இவர்கள் மூவரும் கல்லூரி மாணவர்கள் ஆவர். இந்நிலையில், புதுவலசை கிராமத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி தங்களது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

​அவர்கள் தேவிபட்டினம் மற்றும் புள்ளங்குடிக்கு இடைப்பட்ட சாலையில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறம் அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த கல்லூரி மாணவர் முகமது அசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

​இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேவிபட்டினம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் படுகாயமடைந்த முகமது பகது மற்றும் ஹர்ஷத் ஆகிய இருவரையும் மீட்டு, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

​மேலும், விபத்தில் உயிரிழந்த மாணவர் முகமது அசனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!