ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, ஓரியூரில் அமைந்துள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில் 38-வது திருப்பயணம் நடைபெற்றது. சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பயணத்தில், சிவகங்கை மாவட்டத்திலிருந்து 5,000-க்கும் மேற்பட்ட இறைமக்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
திருப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக ஆயர் லூர்து ஆனந்தம் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைத்து இறைமக்களுக்காகவும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, நற்கருணை (இறையப்பம்) வழங்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய ஆயர் லூர்து ஆனந்தம், ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஏழைகளின் கல்வி, வாழ்விடம் மற்றும் உணவு வசதிகளை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஓரியூர் திருப்பயணம் ஆன்மீகத்தைப் புதுப்பிக்கும் ஒரு நிகழ்வாக அமைந்துள்ளதாகவும், மக்களிடையே ஆன்மீக எழுச்சி அதிகரித்து வருவதாகவும் ஆயர் தெரிவித்தார்.
சிவகங்கை மறைமாவட்டத்தில் வயதானவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக முதியோர் உள்ளிட்ட ஏழை எளியோருக்கு தொடர்ந்து உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் விவசாயத்தைச் சார்ந்த பகுதியாக இருப்பதால், விவசாயத்தைச் சார்ந்த பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, அதன் மூலம் தயாரிக்கப்படும் பால் உற்பத்திப் பொருட்கள் தேவையுள்ள மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இத்திருப்பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
.




You must be logged in to post a comment.