ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டணம் செல்லும் பிரதான சாலையில் வழிவிடும் முருகன் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளதால், இப்பகுதியில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பிரதான சாலையோரங்களில் சில கடைக்காரர்கள் தங்களது கடைகளின் விளம்பர பதாகைகளை வைத்து பொது இடங்களை ஆக்கிரமித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, வாகனங்களை நிறுத்துவதற்காக பயன்படுத்தக்கூடிய இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்கப்படுவதால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் சாலையிலேயே வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
கடைகள் அமைந்துள்ள இடத்தைத் தாண்டி சாலையோரம் வரை விளம்பர பதாகைகளை வைப்பதற்கு யார் அனுமதி அளித்தது? வாகனங்கள் நிறுத்துவதற்கும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்குமான இடங்களை தனியார் விளம்பரங்களுக்காக பயன்படுத்துவது எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பொது இடங்களில் விதிமீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் குறித்து புகார்கள் எழுந்தும் அவற்றை அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
“அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் தான் நாளுக்கு நாள் பொது இட ஆக்கிரமிப்பு அதிகரிக்கிறது” என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தேவிபட்டணம் பிரதான சாலையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும், வாகன நிறுத்தத்திற்கும் இடையூறாக உள்ள விளம்பர பதாகைகள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விதிகளை மீறி விளம்பர பலகை வைத்து கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, தேவிபட்டணம் பிரதான சாலையை ஆக்கிரமிப்புகள் மற்றும் தேவையற்ற விளம்பர பதாகைகளில் அகற்றிவிட்டு, போக்குவரத்து சீராக நடைபெற மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.




You must be logged in to post a comment.