தலா ரூ.10 லட்சம் நிவாரணம், தாயாருக்கு அரசு வேலை வழங்கக் கோரி உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ்–லதா தம்பதியரின் 10 வயது மகள் நிறைமதி மற்றும் 5 வயது மகன் பிரவீன் பாலா ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
அச்சங்குளம் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த இரும்புக் கம்பியை சிறார்கள் பிடித்து விளையாடியபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து, இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த சிறார்களின் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், உயிரிழந்த இரு குழந்தைகளுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், சிறார்களின் தாயாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை சிறார்களின் உடல்களை வாங்கப் போவதில்லை எனக் கூறி, உறவினர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக அச்சங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே கமுதி–மதுரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. உறவினர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்




You must be logged in to post a comment.