தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை குறிவைத்து, அவர்களது புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி போலியான சமூக வலைதள கணக்கின் மூலம் தொடர்ந்து குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோ அழைப்புகள் செய்து, ஆபாசமாக நடந்து கொண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், ஒரே நபர் இரு புகார்தாரர்களையும் குறிவைத்து, அவர்களது புகைப்படங்களை சமூக வலைதள கணக்கின் முகப்புப் படமாக தவறாக பயன்படுத்தி, தொடர்பு கொண்டது தெரியவந்தது.
மேலும், சம்பந்தப்பட்ட நபர் வீடியோ அழைப்பின் மூலம் ஆபாசமாக நடந்து கொண்டு, புகார் தாரர்களையும் ஆபாசமாக நடந்து கொள்ளுமாறு வற்புறுத்தியதுடன், தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இரு புகார்களிலும் குறிப்பிடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப விசாரணை மற்றும் சேகரிக்கப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களின் அடிப்படையில், இச்சம்பவங்களில் தொடர்புடைய நபர் முருகன் மகன் முத்துக்குமார் (33) பள்ளிக்கூடத்தெரு, ஆசாத் நகர், தென்காசி என்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் அறிவுறுத்தலின் படியும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் மேற்பார்வையிலும், காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையிலான தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவது, ஆபாசமான குறுஞ்செய்திகள் அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் தொந்தரவு செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால், பொதுமக்கள் அச்சப்படாமல் உடனடியாக காவல்துறையை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களில் கிடைக்கும் குறுஞ்செய்திகள், வீடியோ அழைப்பு விவரங்கள், ஸ்கிரீன்ஷாட்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களை அழிக்காமல் பாதுகாத்து, விசாரணைக்கு காவல்துறையிடம் ஒப்படைக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.