கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நீண்டகால வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு அமைப்பைச் சேர்ந்த ஆர்.கவி தலைமை தாங்கினார். கனகராஜ் முன்னிலை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் சத்யா சிறப்புரையாற்றினார்.
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தேர்தல் வாக்குறுதியின்படி ரூ.18 ஆயிரம் அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், நீதிமன்றத் தீர்ப்பின்படி ரூ.10 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வாயிலாக வலியுறுத்தப்பட்டன.
மேலும், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், குழந்தைகளுக்கான உணவுச் செலவினத் தொகையை உயர்த்த வேண்டும், சமையல் எரிவாயு சிலிண்டரை இலவசமாக வழங்க வேண்டும், தகுதியுள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு மேற்பார்வையாளர் நிலை–2 ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சனிக்கிழமைகளில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி வழங்க வேண்டும், எஃப்.ஆர்.எஸ். வருகைப் பதிவு முறையை எளிமைப்படுத்த வேண்டும், போஷன் டிராக்கர் மற்றும் இதர பணிகளுக்கான செலவினத் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கோரிக்கைகளை நிறை வேற்றாவிட்டால் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் பொது தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.பாஷா வாழ்த்துரை வழங்கினார். ரேவதி நிறைவுரையாற்றினார். கீதா நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சானவாஸ், குணசேகரன், லூயிஸ் ராஜ் உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.