ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையத்தில், மன்றத் தீர்மானம் இன்றி செயல்பட்டதாகக் கூறப்படும் இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் போலி ரசீதுகள் அச்சிட்டு பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்து, நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர் மற்றும் அச்சக உரிமையாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில், நகராட்சியின் அசல் ரசீதைப் போன்றே போலி ரசீதுகள் அச்சிட்டு பொதுமக்களிடம் கட்டணம் வசூலிப்பதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, செப்டம்பர் 22ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மற்றும் நகராட்சி ஆய்வு பிரிவு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது, வாகன நிறுத்துமிடம்-1ல் துப்புரவு மேற்பார்வையாளர் ஆனந்தன் பொதுமக்களிடம் போலி ரசீதுகள் மூலம் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்ததாகவும், அருகில் வருவாய் உதவியாளர் மாரிமுத்து அதனை மேற்பார்வையிட்டு வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து ரூ.20 மதிப்புள்ள 19 போலி ரசீது புத்தகங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.12,750 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஜோசப் என்பவருக்குச் சொந்தமான அச்சகத்தில் நகராட்சி அரசு ரசீதுகளைப் போன்றே போலி ரசீதுகள் அச்சிடப்பட்டதாக அதிகாரிகள் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 52 போலி ரசீது புத்தகங்கள் அச்சிடப்பட்டிருந்ததும், ஒரு புத்தகத்தில் 100 ரசீதுகள் வீதம் மொத்தம் ரூ.1,04,000 மதிப்புள்ள ரசீதுகள் இருந்ததும் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதில் 19 புத்தகங்கள் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 33 புத்தகங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகராட்சி பணம் பெறும் அலுவலர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அதிகாரப்பூர்வமாக 25 ரசீது புத்தகங்கள் வழங்கப்பட்டு ரூ.50,000 வசூலிக்கப்பட்டதில் ரூ.48,000 மட்டுமே நகராட்சியில் செலுத்தப்பட்டதாகவும், 300 அசல் ரசீது புத்தகங்களுக்கான இருப்புப் பதிவேடு முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 23ஆம் தேதி ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (வருவாய் ஆய்வாளர்), மாரிமுத்து (வருவாய் உதவியாளர்), ரிஷி கேசவன் (வருவாய் உதவியாளர்), ஆனந்தன் (துப்புரவு மேற்பார்வையாளர்), ஜோசப் (அச்சக உரிமையாளர்) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மாரிமுத்துவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.23,500 ரொக்கம் மற்றும் போலி ரசீதுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இந்த மோசடி மற்றும் ஊழல் சம்பவத்தில் மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







You must be logged in to post a comment.