அச்சுந்தன்வயலில் விண்ணை நோக்கி செல்லும் அளவுக்கு சீறிப்பாய்ந்த குடிநீர் – உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினார்
ராமநாதபுரம் நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் குடிநீருக்காக திண்டாடி வரும் நிலையில், அச்சுந்தன்வயல் செக்போஸ்ட் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீண்ட தொலைவுக்கு குழாய்கள் வழியாக குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் செக்போஸ்ட் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உடைந்த குழாயில் இருந்து குடிநீர் கட்டுக்கடங்காமல் வெளியேறி, பல அடி உயரத்திற்கு சீறிப்பாய்ந்து உள்ளது.
ஒருபுறம் ராமநாதபுரம் நகர மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், மறுபுறம் பிரதான குழாய் உடைப்பால் பெருமளவு குடிநீர் வீணாகி வருவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், குடிநீருக்காக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், நீண்ட தொலைவில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகி வருவது குடிநீர் மேலாண்மை குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.
எனவே, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய் உடைப்பை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சீரமைத்து, வீணாகும் குடிநீரை தடுத்து, ராமநாதபுரம் நகர மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகத்தை விரைவில் வழங்க அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.