500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு – தொழிற்சங்கங்கள் போராட்ட எச்சரிக்கை
கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் பன்னாட்டு வைர உற்பத்தி நிறுவனமான டிமெக்சான் (Dimexon) ஆலையில் தொழிலாளர்களுக்கு நிலவும் தொழில்சார் சுகாதாரப் பிரச்னைகள், பணிச்சுமை மற்றும் ஊதிய நடைமுறைகள் தொடர்பான குறைகளை முன்வைத்து, சிஐடியு மற்றும் ஐஎன்டியுசி தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாவட்டத் துணைத்தலைவர் நவ. சிவராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆலையில் சுமார் 1,700 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. வைரக் கற்களைப் பட்டை தீட்டும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நீண்டகாலமாக பல்வேறு தொழில்சார் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.
குறிப்பாக, வைரப் பட்டை தீட்டும் பணியின்போது உருவாகும் நுண்துகள்களை நீண்டகாலம் சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகள், தொடர் இருமல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாகவும், நீண்ட நேரம் மைக்ரோஸ்கோப் மூலம் பணிபுரிவதால் கண், கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
முக்கியக் கோரிக்கைகள்
* தொழிலாளர்களுக்கு நடைமுறையில் உள்ள உற்பத்தியுடன் இணைந்த ஊதிய முறையை ரத்து செய்து, பழைய ஊக்கத்தொகை முறையையும் சட்டப்பூர்வ அடிப்படை ஊதியத்தையும் அமல்படுத்த வேண்டும்.
* குரூப்-2, குரூப்-3 தொழிலாளர்கள் மீது கூடுதல் உற்பத்தியைத் திணித்து ஊதியத்தைக் குறைப்பதையும், ‘கன்வெர்ஷன்’ முறையையும் கைவிட வேண்டும்.
* 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பெண் தொழிலாளர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு மற்றும் நிரந்தர ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
* கடின வைரக் கற்களை குறுகிய காலக்கெடுவில் முடிக்குமாறு தொழிலாளர்களுக்கு பணிச்சுமை மற்றும் அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* வயது முதிர்வு மற்றும் உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வரும் தொழிலாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும்.
* பேச்சுவார்த்தைகளின்போது தொழிலாளர்களை அச்சுறுத்தாமல், தொழிற்சங்கங்களுடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.
* தொழில்சார் சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி தொழிலாளர்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே. மனோகரன், மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் பி. சத்யா, டைமண்ட் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் வி. குமார், பொருளாளர் ஆர். வசந்தி, மேட்டுப்பாளையம் தாலுகா பொதுத்தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எஸ். பாஷா, ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளர் வி.ஆர். பாலசுந்தரம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
மேலும் சிஐடியு நிர்வாகிகள் டி. செந்தில்குமார், என். மோகன்குமார், பிரமிளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் உரிய தீர்வு காணாமல் தொடர்ந்து புறக்கணித்தால், சிஐடியு மற்றும் ஐஎன்டியுசி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பைத் திரட்டி மாவட்ட அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.









You must be logged in to post a comment.