24 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.!

மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.!

எழுதியவர்: Baker BAker September 23, 2026, 2:02 pm

கணக்கில் வராத ரூ.7.11 லட்சம் ரொக்கம் மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கண்டுபிடிப்பு – சிலர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையினர் நடத்திய விடிய விடிய சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.7 லட்சத்து 11 ஆயிரத்து 299 மதிப்பிலான ரொக்கம் மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் கண்டுபிடிக்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி ஆணையாளராக அமுதாவும், பொறியாளராக சரவணகுமாரும் பணியாற்றி வருகின்றனர்.

நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து வருகின்றனர். மேலும், வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, காலியிட வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளையும் பொதுமக்கள் ரொக்கமாகவும், ஆன்லைன் மூலமாகவும் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் ஷீலா, எழிலரசி, ஆறுமுகம், பிரபுதாஸ் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று மதியம் சுமார் 3.30 மணியளவில் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.

அதிகாரிகள் அலுவலகத்திற்குள் நுழைந்ததும், நுழைவு வாயிலில் இருந்த இரு கதவுகளும் பூட்டப்பட்டன. இதையடுத்து வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளர் அறைகள், நகரமைப்பு பிரிவு, குடிநீர் வழங்கல் பிரிவு, பொறியாளர் பிரிவு, பொது பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலக அறைகளிலும் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மேலும், நகராட்சி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு மற்றும் தனியார் வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. கார்களின் உள்பகுதி, பின்புறப் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆவணங்கள் மற்றும் பணம் ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதனிடையே, நேற்று மாலை சுமார் 7 மணியளவில் நகராட்சி ஊழியர்கள் அரசு அலுவலக வாகனம் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று மதியம் 3.30 மணியளவில் தொடங்கிய சோதனை இன்று அதிகாலை 5.15 மணி வரை, சுமார் 14 மணி நேரம் நடைபெற்றது.

சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாததாகக் கூறப்படும் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 900 ரொக்கம் மற்றும் கூகுள் பே உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் ரூ.5 லட்சத்து 72 ஆயிரத்து 399 என மொத்தம் ரூ.7 லட்சத்து 11 ஆயிரத்து 299 மதிப்பிலான பணம் கண்டறியப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பணம் ரொக்கமாகவும், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமாகவும் கைமாறியிருப்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

சோதனை மற்றும் விசாரணை தொடர்பான முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!