“மக்கள் நலனுக்காக இதுவரை ரூ.1.80 கோடி வழங்கியுள்ளேன்” – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து பூல்பாண்டி நெகிழ்ச்சி
யாசகமாக பெற்ற பணத்தை தனது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தாமல், மக்கள் நலப்பணிகளுக்காக தொடர்ந்து வழங்கி வரும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று யாசகமாக பெறும் பணத்தை அரசு மற்றும் பொதுநல நிதிகளுக்கு வழங்கி வரும் பூல்பாண்டியின் செயலைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர், அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பூல்பாண்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று யாசகமாக பெறும் பணத்தை மக்கள் நலனுக்காக வழங்கி வருவதாக தெரிவித்தார். இதுவரை 38 மாவட்டங்களுக்குச் சென்று, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் யாசகமாக பெற்ற தொகையை அரசு நலத்திட்டங்களுக்காக வழங்கியுள்ளதாக கூறினார்.
மேலும், அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தனது யாசகப் பணத்தில் இருந்து நிதியுதவி வழங்கியதாக தெரிவித்தார்.
“யாசகமாக பெற்ற பணத்தில் இருந்து இதுவரை ரூ.1 கோடியே 80 லட்சத்தை மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக அரசுக்கு வழங்கியுள்ளேன்” என்று பூல்பாண்டி தெரிவித்தார்.
தனக்குக் கிடைக்கும் சிறு சிறு தொகைகளையும் சேமித்து, அவற்றை சமூக நலனுக்காக வழங்கி வரும் பூல்பாண்டியின் இந்த முயற்சி அப்பகுதியில் கவனம் பெற்றுள்ளது.




You must be logged in to post a comment.