ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக அரசு மருத்துவமனை, அரசு தொடக்கப்பள்ளி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கியதால் பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
திருவாடானை ஊராட்சிக்கு உட்பட்ட மதுரை–தொண்டி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் அமைந்துள்ள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்கள் நீண்ட நாட்களாக முறையாக தூர்வாரப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், பல இடங்களில் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழைநீர் செல்ல வழியின்றி சாலையோரங்களில் தேங்கியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கனமழையின்போது வடிகால் வசதி இல்லாததால் தேங்கிய மழைநீர் கடைகளுக்குள்ளும் புகுந்தது. இதனால் வியாபாரிகள் பொருட்களை மிகுந்த சேதம் அடைந்துள்ளது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதே நிலை தொடர்ந்தும், நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
மழை பெய்த பின்னர் நடவடிக்கை எடுப்பதைவிட, மழைக்காலத்திற்கு முன்பே கால்வாய்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றியிருந்தால் இந்த நிலையை தவிர்த்திருக்க முடியும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
எனவே, திருவாடானை பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் சாக்கடை கால்வாய்களை முழுமையாக ஆய்வு செய்து உடனடியாக தூர்வார வேண்டும். கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் மற்றும் கழிவுநீர் தடையின்றி செல்ல நிரந்தர வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.