ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த பன்றிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
கீழக்கரை நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா தலைமையில் நகராட்சி பணியாளர்கள் பன்றிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கீழக்கரை நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகள் சுற்றித் திரிவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட பன்றி வளர்ப்பவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. பன்றிகளை அப்புறப்படுத்துவதற்கு சுமார் இரண்டு மாத கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் பன்றிகள் அப்புறப்படுத்தப்படாமல் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் நேரடியாக நடவடிக்கை மேற்கொண்டது.
நகரின் தூய்மை மற்றும் சுகாதாரத்தை பாதுகாப்பதுடன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகளை சுற்றித்திரிய விடுபவர்கள் மீது உரிய சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.




You must be logged in to post a comment.