50 ஆயிரம் மக்களின் மருத்துவ உரிமை பறிப்பு – அதிகாரிகளின் அலட்சியத்துக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு கடும் குற்றச்சாட்டுடன் மனு
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2023–24ஆம் ஆண்டில் மக்களின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கட்டிடப் பணிகள் முழுமையடையாத நிலையிலேயே கடந்த ஆட்சிக் காலத்தில் திறக்கப்பட்டு, திறந்த மறுநாளே மூடப்பட்டதாக கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக பலமுறை மனுக்கள் அளித்தும், அதிகாரிகளிடம் நேரில் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பான முக்கிய பிரச்சினையை அதிகாரிகள் அலட்சியம் செய்து வருவதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் கீழக்கரையில் பெரும்பாலானோர் மீனவர் தொழிலை நம்பி வாழ்ந்து வரும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவச் சேவைக்காக அரசின் நிதியில் உருவாக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இன்று வரை செயல்படாமல் பூட்டிக் கிடப்பது வேதனையளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
அவசர காலங்களில் பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் நிலவுவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்தையும் உயிர் ஆபத்தையும் எதிர்கொள்வதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் இனியும் காலதாமதம் செய்யாமல், கட்டிடப் பணிகளை உடனடியாக நிறைவு செய்து, தேவையான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து, ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.
பொதுமக்களின் அடிப்படை மருத்துவ உரிமையை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.




You must be logged in to post a comment.