ரீல்ஸ் வாழ்க்கையில் இருந்து ரியல் வாழ்க்கைக்கு வர வேண்டும்; கொந்தளித்த தமிழிசை.!
தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரே வாரத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள் போன்ற குற்றங்கள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்..
தவெக அரசு ‘ரீல்ஸ்’ வாழ்க்கையிலிருந்து ‘ரியல்’ வாழ்க்கைக்கு வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், முதலமைச்சரின் அறையிலேயே ஒருவர் ரீல்ஸ் எடுப்பதும், அதை அங்கிருந்த அதிகாரிகளோ அல்லது முதலமைச்சரோ கண்டிக்காமல் இருப்பதும் நிர்வாகக் குளறுபடியைக் காட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆட்சிக்கு வந்த உடனே அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண் படை’ என்ன வேலை செய்கிறது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ள தமிழிசை, தவெக அரசின் ஊழல் எதிர்ப்பு முழக்கங்களையும் சாடியுள்ளார். தாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று தவெக கூறினாலும், ஆட்சிப் பொறுப்பேற்ற வெறும் 6 மணி நேரத்திற்குள்ளாகவே அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் துறையில் டெண்டர்களுக்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது என்ற செய்திகள் மிகுந்த கவலை அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மதுபான விலை விவகாரம் குறித்துப் பேசிய அவர், முன்பு “பாட்டிலுக்கு 10 ரூபாய்” என்று பாடிய விஜய், தற்போது “பாட்டிலுக்கு 20 ரூபாய்” என்று பாடப் போகிறாரா அல்லது 20 ரூபாய் இல்லாமல் பாடப் போகிறாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்தத்தில் தவெக அரசின் தற்போதைய செயல்பாடுகள் “ஒன்றுமே புரியவில்லை” என்ற சூழலை உருவாக்கியுள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சித்துள்ளார்.




You must be logged in to post a comment.