இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் “Operation SHIELDNET” என்ற பெயரில் தீவிர குற்றத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை காவல் நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த வகையில் நடைபெறும் இந்த நடவடிக்கையின் கீழ், ரவுடிகள் மற்றும் தொடர் குற்றவாளிகள் கண்காணிப்பு, நீண்டநாள் நிலுவையில் உள்ள பிடியாணைகள் (NBW) நிறைவேற்றுதல், தீவிர வாகன சோதனைகள், BNSS சட்டப் பிரிவு 126ன் கீழ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கை தற்போது மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், காவல்துறையினர் மொத்தம் 1,114 சந்தேக நபர்களை சோதனை செய்துள்ளனர். இதில் 91 சரித்திரப் பதிவேட்டில் உள்ளவர்கள் அடங்குவர். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த 4 பழங்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், நீண்டநாள் நிலுவையில் இருந்த 33 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், BNSS சட்டப் பிரிவு 126ன் கீழ் 12 நபர்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாகன சோதனைகளின் போது பதிவு எண் இல்லாமல் இயக்குதல், அதிவேகம் மற்றும் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், கண் கூசும் விளக்குகள் பொருத்துதல், விதிமுறைகளை மீறி வாகனங்களில் மாற்றங்கள் செய்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக 469 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஜாமீன் ரத்து நடவடிக்கைகள் மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் மீது வலுவான வழக்குப்பதிவு செய்து, தண்டனை பெறுவதை உறுதி செய்ய காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய உட்கோட்ட அளவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கஞ்சா மற்றும் புகையிலை தொடர்பான தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளின் மூலம் சுமார் 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களும் இணைந்து, குற்றவாளிகள் மற்றும் குற்றச்செயல்களுக்கு எதிரான இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஸ் தெரிவித்துள்ளார்.




You must be logged in to post a comment.