23 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » அரசியல் இடைவெளியைப் பயன்படுத்தி மும்மொழித் திட்டமான ‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தைத் திணிப்பதா? -ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரப் போக்குக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!

அரசியல் இடைவெளியைப் பயன்படுத்தி மும்மொழித் திட்டமான ‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தைத் திணிப்பதா? -ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரப் போக்குக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்!

எழுதியவர்: Askar May 8, 2026, 10:31 am

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, புதிய அரசு இன்னும் பதவி ஏற்காத ஒரு தற்காலிக இடைவெளி நிலவி வரும் நிலையில், ஒன்றிய பாஜக அரசு தனது மும்மொழித் திட்டத்தைத் திணிக்கும் ‘பிஎம் ஸ்ரீ’ (PM SHRI) திட்டத்தை ஏற்கச் சொல்லி தமிழகத்திற்கு நெருக்கடி தருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முழுமையான அரசு பொறுப்பில் இல்லாத நேரத்தில், இத்தகைய கொள்கை முடிவுகளை எடுக்கச் சொல்லி அதிகாரிகளை வற்புறுத்துவது ஜனநாயகப் படுகொலையாகும். தமிழகத்தின் கல்வி உரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவுள்ள புதிய அரசுக்கே உள்ளது. அதை விடுத்து, அதிகார மட்டத்தில் அழுத்தங்களைக் கொடுத்து மும்மொழித் திட்டத்தை நுழைக்கப் பார்ப்பது ஒன்றிய அரசின் அரசியல் அறமற்ற செயலையே காட்டுகிறது. கல்வி மேம்பாட்டிற்கான நிதி என்பது மாநிலங்களின் அடிப்படை உரிமை. அந்த நிதியை வழங்க ‘தேசியக் கல்விக் கொள்கையை’ ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிப்பதன் மூலம், தமிழகத்தின் இருமொழிக் கொள்கையைச் சிதைக்க ஒன்றிய அரசு துடிக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு விடப்பட்ட சவாலாகும். தமிழகத்தின் மொழி உணர்வோடும், கல்வி உரிமையோடும் விளையாடுவதை ஒன்றிய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். புதிய அரசு அமையவுள்ள வேளையில், கொல்லைப்புற வழியாக இந்தித் திணிப்பை மேற்கொள்ளும் ‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தை எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் ஒருபோதும் அனுமதிக்காது. தமிழகத்தின் கல்விச் சுதந்திரத்தைப் பறிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் எதேச்சாதிகாரப் போக்கை முறியடிக்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். தமிழகத்தின் மீது இது போன்று மும்மொழி கொள்கைகளை திணிக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!