23 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நாகர்கோவில் மாநகராட்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு! சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு..

நாகர்கோவில் மாநகராட்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு! சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு..

எழுதியவர்: Askar April 30, 2026, 1:44 pm

நாகர்கோவில் மாநகராட்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு! சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு..

நாகர்கோவில் மாநகராட்சியில் முறைகேடாக அறுக்கும் ஆடு, மாடு இறைச்சி விற்பனையால் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கும் அளவுக்கு சீர்கேடாக மாறியுள்ளது. இது சாதாரண தவறல்ல. அரசு அதிகாரிகள் அலட்சியம் மற்றும் பொதுமக்கள் உயிர்தானே என்கிற அதிகார துஷ்பிரயோகமும் சேர்ந்த மிகப்பெரிய சுகாதார குற்றமாகும்.

மாநகராட்சி விதிகளின்படி, ஆடு மற்றும் மாடுகள் அங்கீகரிக்கப்பட்ட அறுக்குமிடங்களில் மட்டுமே, சுகாதாரத்துறை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே இறைச்சி விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில், இந்த சட்டங்கள் அதிகாரிகள் துணையுடன் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. சில சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மாமூல் பெற்றுக்கொண்டு தங்களது கடமைகளை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். இதன் விளைவாக, நோய்வாய்ப்பட்ட மற்றும் இறந்த கால்நடைகளின் இறைச்சிகள், மீந்து போன மற்றும் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட பழைய இறைச்சிகள் கூட பொதுமக்களுக்கு விற்கப்படுகின்றன என்பது அதிர்ச்சிகரமான உண்மை. அதுமட்டுமல்லாமல், சட்டபூர்வமான அறுக்குமிடங்களை முற்றிலும் புறக்கணித்து, தனிப்பட்ட கடைகளிலேயே அவரவர் விருப்பம்போல் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி கண்காணிப்பு இல்லாமல் கால்நடைகளை அறுக்கும் செயல்கள் வெகுவாக அதிகரித்துள்ளன.

இது அப்பட்டமான சட்ட மீறல் மட்டுமல்ல. இறைச்சியை நம்பி வாங்கி உண்ணும் பொதுமக்களின் உடல்நலத்தை நேரடியாக ஆபத்துக்கு உள்ளாக்கி உயிருக்கு உலை வைக்கும் கொடூரமான செயலாக உள்ளது.

இதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் தினசரி அல்லது அவர்களுக்கு தேவையான நேரங்களில் இலவசமாக இறைச்சி பெற்று செல்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள், அவர்களின் நம்பகத்தன்மையை முற்றிலும் சிதைக்கும் வகையில் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், அவர்கள் எவ்வாறு நேர்மையான நடவடிக்கை எடுப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாகிறது. மேலும் நாகர்கோவில் மாநகரில் விற்கப்படும் இறைச்சி உண்மையில் சுகாதாரமானதா? அல்லது நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் இறைச்சியா என்ற சந்தேகம் இறைச்சி வாங்கும் பொதுமக்களிடையே தீவிரமாக எழுந்துள்ளதோடு, இந்த அவலநிலையானது மாநகராட்சி நிர்வாகத்திற்கு மட்டுமின்றி ஏதேனும் தொற்று நோய்கள் மற்றும் உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில் சட்டப்படியான நிர்வாகம் கேள்விக்குறியாகிவிடும்.

எனவே, இச்சூழ்நிலையை தொடர்ந்து அனுமதிக்காத வகையில், தமிழ்நாடு அரசும் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

1) அனைத்து இறைச்சிக் கடைகளிலும் திடீர் மற்றும் கடுமையான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

2) அங்கீகரிக்கப்படாத இடங்களில் நடைபெறும் அறுக்குதலை முற்றிலும் தடுக்க வேண்டும்.

3) சுகாதார பரிசோதனை செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ முத்திரை வைக்கப்படாத இறைச்சி விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்.

4) விதிமுறைகளை மீறும் கடைகளின் உரிமங்களை உடனே ரத்து செய்து, குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

5) இறைச்சி விற்பனை தொடர்ந்து கண்காணிக்காமல் கடமையில் தவறும் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6) பொதுமக்களின் உயிரை பணயம் வைத்து நடைபெறும் முறைகேடான இறைச்சி விற்பனை அக்கிரமங்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு சுகாதாரத்துறை நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசு பொறுப்பாகும் என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு சமூக ஆர்வலர் கி. குமரேசன் மாவட்ட செயலாளர், ஆதித்தமிழர் கட்சி ஆதிதிராவிடர் (அரசு சார்பற்ற) மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர், குமரி மாவட்டம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!