தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை வெப்பம் முன்கூட்டியே தொடங்கியுள்ள சூழலில், தென் மாநிலங்களின் மின் தேவை குறித்த ஒப்பீட்டு அறிக்கையை மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது. 2025-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன், நடப்பாண்டு (2026) மார்ச் மாத மின் பயன்பாட்டை ஒப்பிடுகையில் தென் மாநிலங்களின் தினசரி மின்தேவை 69,934 மெகாவாட்டிலிருந்து 73,805 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.
குடியிருப்பு மற்றும் வணிகத் துறைகளின் வளர்ச்சி காரணமாக ஆண்டுதோறும் 5 முதல் 8 லட்சம் புதிய நுகர்வோர் தமிழகத்தில் இணைந்து வருகின்றனர். முன்னதாகவே தொடங்கிய கோடை வெப்பத்தால் ஏசி (AC) போன்ற குளிர்சாதனப் பெட்டிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி மின் நுகர்வில் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் மொத்த ஆற்றல் தேவை அடுத்த 10 ஆண்டுகளில் 89% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 2026-27 ஆம் ஆண்டில் 1.48 லட்சம் MU-ஆக இருக்கும் தேவை, 2035-36 ஆம் ஆண்டிற்குள் 2.80 லட்சம் MU-ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல் மாலை நேரங்களில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதால், மின்தேவையை முன்கூட்டியே மதிப்பீடு செய்து மின் கொள்முதல் நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக மின் வாரியத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், மின் தேவை மற்றும் பற்றாக்குறை எவ்வளவு இருக்கும் என்பதை முன்கூட்டியே மதிப்பீடு செய்துள்ளோம். பற்றாக்குறை சமாளிக்கத் தேவையான மின் கொள்முதல் நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன என்று உறுதியளித்துள்ளார்.




You must be logged in to post a comment.