21 April 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: முதல்வரின் கருப்புக் கொடி ஏந்தும் போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு!

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: முதல்வரின் கருப்புக் கொடி ஏந்தும் போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு!

எழுதியவர்: Askar April 15, 2026, 7:15 pm
தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் மூலம் தென்மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் சதிக்கு எதிராகக் கருப்புக்கொடி ஏந்துவோம்! -தமிழக முதல்வரின் அறைகூவலுக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு!
இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்திற்கு எதிராக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை அறிவித்துள்ள கருப்புக்கொடி ஏந்தும் போராட்டத்திற்கு, எஸ்டிபிஐ கட்சி தனது முழுமையான ஆதரவை அளிப்பதோடு போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றி வரும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களைத் தண்டிக்கும் நோக்கில், ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரத் துடிக்கும் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் ஒரு வரலாற்று அநீதியாகும். தேச நலனுக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பறித்து, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசின் இந்த ஓரவஞ்சனைப் போக்கை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் இந்தச் சதிக்கு எதிராக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள போராட்டமானது வெறும் அரசியல் சார்ந்தது மட்டுமல்ல; இது தமிழர்களின் சுயமரியாதை மற்றும் அரசியல் உரிமைகளைத் தற்காப்பதற்கான போராட்டம். தமிழ்நாட்டின் குரல்வளையை நெரிக்க நினைக்கும், தமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சதியை முறியடிக்க அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைய வேண்டும். இந்த அறப்போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி தனது முழுமையான ஆதரவைத் தெரிவிப்பதோடு, மாநிலம் தழுவிய அளவில் இதில் தீவிரமாகப் பங்கேற்கும். எனவே, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், நாளை ஒருநாள் கருப்பு நிறச் சட்டைகளை அணிந்தும் தங்களது வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர்களின் அரசியல் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது என்பதைப் பறைசாற்றும் வகையில், கட்சிப் பேதங்களைக் கடந்து தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இந்தத் தொகுதி மறுவரையறைக்கு எதிரான போராட்டத்தில் அணிதிரள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் அறைகூவல் விடுக்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!