நிலக்கோட்டை தொகுதியில் 60 ஆண்டுகளுக்கு பிறகு திமுக போட்டி. நிலக்கோட்டை உட்பட மாவட்டத்தில் 7 தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு..
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை (தனி) தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டப்பேரவை உறுப்பினருமான, இ.பெ.செந்தில்குமார் தலைமை வைகித்தார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நிலக்கோட்டை (தனி) தொகுதி திமுக வேட்பாளர் ச.நாகஜோதி அவர்களை அறிமுகப்படுத்தி, அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது, நீண்ட காலமாக நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. இந்த முறை நிலக்கோட்டை தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்பதற்காக, நான் எனது பழனி சட்டப்பேரவை தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்க சொல்லிவிட்டேன். அதனால், நிலக்கோட்டை தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறேன். எனவே இந்த முறை நிலக்கோட்டை (தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சகோதரி ச.நாகஜோதி அவர்கள் வெற்றி பெற நீங்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் தேர்தல் பணியாற்ற வேண்டும். மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சராகக மு.க.ஸ்டாலின் வர உள்ள நிலையில் நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியின் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும் என, பேசினார்.
உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது, நிலக்கோட்டை தொகுதியில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு திமுக போட்டியிடுகிறது. இந்த முறை நிலக்கோட்டை தொகுதி திமுக கைப்பற்றியே ஆக வேண்டும். எனவே, திமுக வேட்பாளர் நாகஜோதிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதற்கான பணியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஈடுபட வேண்டும் என பேசினார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது, நிலக்கோட்டை தொகுதியில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ., முனியாண்டிக்கு பிறகு திமுக போட்டியிடுகிறது. இந்த முறை நிலக்கோட்டை சட்டப் பேரவை தொகுதி உட்பட மாவட்டத்தில் 7 தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 234 தொகுதிக்கு 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவது உறுதி. நிலக்கோட்டை தொகுதியில் கருத்து வேறுபாடுகளை மறந்து திமுக நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற வேண்டும். திமுகவில் கடந்த 1980, 84-ல் எனக்கு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நான் தொடர்ந்து கட்சிப் பணி மற்றும் தேர்தல் பணியாற்றி வந்தேன். அதன் பிறகு எனக்கு 1989-ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வாய்ப்பு வழங்கப்பட்டது. எனவே, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் வருத்தப்படாமல் தேர்தல் பணியாற்றி, திமுக வேட்பாளர் நாகஜோதியை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்ட பணிகளை செயல்படுத்தி உள்ளதால், அதனைச் சொல்லி மக்களிடம் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திமுக வேட்பாளர் நாகஜோதியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என, அமைச்சர் இ.பெரியசாமி பேசினார். திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், இந்த நிலக்கோட்டை (தனி) சட்டப்பேரவை தொகுதி திமுக பொறுப்பாளர் கம்பம் பாண்டியன், நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஒன்றிய திமுக நிர்வாகிகள், திமுக பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




You must be logged in to post a comment.