ராமநாதபுரம், ஏப்.5: தமிழகத்தில் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் ரூ.9.47 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாயல்குடி தேர்தல் சோதனைச் சாவடியில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட கிலோ கணக்கிலான தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.9 கோடியே 47 லட்சத்து 22 ஆயிரத்து 868 என கணக்கிடப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன.
இந்த நகைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, நகைக்கடைக்குச் சொந்தமானவையா அல்லது வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முறையான ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ எடுத்துச் செல்லக்கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ள நிலையில், இந்தப் பறிமுதல் சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.