எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் அவதூறாக விமர்சிப்பது கடும் கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; அஇஅதிமுக பொதுச் செயலாளரும் ,எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, தேர்தல் தோல்வி பயம் தொற்றிக் கொண்டு விட்டது. விரக்தியின் உச்சக்கட்டத்திற்கு சென்று விட்டார்.பாஜக வின் மிரட்டல் உருட்டல்களுக்கு அடிபணிந்து சந்தர்பவாதக் கூட்டணியை பாஜக வோடு உருவாக்கினார். ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத்துறை, மத்திய உளவுத்துறை (சி.பி.ஐ), மற்றும் வருமானவரித்துறை மூலம் கொடுத்த அழுத்தத்தால், அஇஅதிமுக வை ஆர்எஸ்எஸ் மதவெறி அமைப்பிற்கு பலிக்கடா ஆக்கிவிட்டார்.எதிர்காலத்தில் அஇஅதிமுக என்ற கட்சியே இருக்குமா? என்ற நிலையை எடப்பாடி உருவாக்கிவிட்டார். இந்த அவலத்திலிருந்து, உண்மையான அஇஅதிமுக தொண்டர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தனிப்பட்ட முறையில் இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து தேர்தல் பரப்புரை கூட்டங்களில் அவதூறாகப் பேசிவருகிறார். முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் அவரது வீட்டிலும், மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். கலைஞரின் மகனான முதல்வர் ஸ்டாலின் உட்பட ,குடும்பத்தினர் அனைவரும் கலைஞரை அன்போடும்,கனிவோடும், அக்கறையோடும் கவனித்து வத்தனர் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். இந்நிலையில், கலைஞரை கடைசி காலத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீட்டுச் சிறையில் வைத்திருந்தார் என எடப்பாடி பழனிசாமி அவர்கள் அவதூறாக பேசியதை கேட்டு தமிழக மக்களே கடும் எரிச்சலடைந்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன் வைக்கும் அரசியல் கருத்துகளை அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறமையும்,திராணியும், ஜனநாயகப் பண்பும் இல்லாமல், கீழ்த்தரமான அவதூறுகளை பரப்புவது எதிர்கட்சித் தலைவர் பொறுப்பை வகிக்கும், முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமிக்கு அழகல்ல. இது கடும் கண்டனத்திற்குரியது. கீழ்த்தரமான, அநாகரீகமான அரசியல் செய்வதை கைவிட்டு, ஆரோக்கியமான அரசியலில் ஈடுபடவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு எடப்பாடி பழனிசாமி அவர்களை கேட்டுக் கொள்கிறது என தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள, திராவிடர் கழகத் தலைவர், பேராசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்துள்ள கண்டனத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் அதிமுக பொது பொது செயலாளராகவும் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி கலைஞர் குறித்து தரம் தாழ்ந்த ஆதாரமில்லாத உண்மைக்கு மாறான செய்தியை பேசியுள்ளார். பண்பாடற்ற பழனிச்சாமிக்கு மனிதநேயத்தை பற்றி ஒன்றும் தெரியாது, கலைஞர் இறந்த பொழுது முதலமைச்சர் அவருடைய இல்லத்திற்கு சென்று நினைவிடம் அமைக்க அனுமதி கேட்டார் ஆனால் அதற்கு ஆர்எஸ்எஸ் உத்தரவுக்கு அடிபணிந்து மறுத்தவர்தான் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.ஆனால் அப்பொழுது நீதிமன்றத்தின் வாயிலாக நினைத்ததை சாதித்து காட்டியவர் நம்முடைய முதலமைச்சர்.ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு நான் முதல்வராக இருந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி அனுமதி கேட்டார் அதற்கு அனுமதி கொடுத்தவர் நம்முடைய முதலமைச்சர்.ஜெயலலிதா அம்மையார் கடைசி நேரத்தில் எப்படி வைத்து இருந்தார்கள் என்று சொன்னால் அது சரியாக இருக்காது.அனைத்து வகையிலும் கலைஞருக்கு உதவியாக இருந்தவர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அதனை நேரில் பார்த்தவன் நான் என கூறியுள்ளார்.
கலைஞர் குறித்து பழனிசாமியின் அவதூறு பேச்சு; கல்லினும் கொடிய மனம் கொண்ட பழனிசாமி: குவியும் கண்டனங்கள்!!
எழுதியவர்: Askar April 5, 2026, 10:15 am




You must be logged in to post a comment.