77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய படை பிரிவும், ஈஷாவும் இணைந்து நடத்தும் ராணுவ வீரர்களுக்கான ஹத யோகா பயிற்சி வகுப்புகள் அன்று (ஆக.15) தொடங்கியது.
மன அழுத்த மேம்பாட்டிற்கான யோகா மற்றும் முழுமையான நல்வாழ்வு’ என்ற தலைப்பில் நடத்தப்படும் ஒரு வார யோகா வகுப்பு 9 மாநிலங்களில் 19 இடங்களில் நடைபெற உள்ளது. இதில் ஈஷா யோகா மையத்தில் 21 வாரங்கள் தங்கி பயிற்சியை நிறைவு செய்த ஈஷா ஹத யோகா ஆசிரியர்கள் மூலம் 10,000 தரைப்படை வீரர்களுக்கு இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது. இவ்வகுப்பில் பங்கேற்கும் ராணுவ வீரர்களுக்கு சூர்ய க்ரியா, அங்கமர்த்தனா உள்ளிட்ட ஹத யோகா பயிற்சிகளும், உளவியல் ரீதியான நல்வாழ்வையும், சமநிலையையும் அளிக்கும் நாடி சுத்தி, ஈஷா க்ரியா ஆகிய பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்படும்.
தொடக்க விழா நிகழ்வில் சத்குருவின் வீடியோ செய்தி ஒளிப்பரப்பட்டது. அதில் சத்குரு கூறுகையில், “ராணுவ வீரர்களாகிய நீங்கள் உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் தேவையான செயல்களை செய்துள்ளீர்கள். இருப்பினும், உங்களுக்குள் மன ரீதியான மற்றும் சக்தி ரீதியான திறன்களை மேம்படுத்தும் விஷயத்தில் யோகாவும், அதன் உள்நிலை தொழில்நுட்பங்களும் அளப்பரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே, ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களுக்கும், பிற பாதுகாப்பு படை வீரர்களுக்கும் நாங்கள் இந்த யோக பயிற்சிகளை கற்றுக்கொடுத்துள்ளோம். மேலும், பாதுகாப்பு படைகளில் 300 யோகா பயிற்சியாளர்களையும் உருவாக்கி இருக்கிறோம். இப்போது தெற்கு பிராந்திய வீரர்களுக்கு இதை அர்ப்பணிக்க உள்ளோம்” என்றார்.
மேலும், உள்நிலை நல்வாழ்விற்கு யோகாவின் அவசியம் குறித்து பேசுகையில், “இந்த யோக பயிற்சியில் நீங்கள் ஈடுபடும் போது, நீங்கள் யார் என்ற அடிப்படையே மாற்றம் பெறுவதை நீங்கள் பார்க்க முடியும். மேலும், மனம் என்பது துன்பங்களை உருவாக்கும் இயந்திரம் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். இது ஒரு அதிசயம். இந்த அதிசயத்தை நிகழ்த்தும் செயல்முறையில் யோகா உங்கள் ஏராளமான நன்மைகளை தரும்.
நீங்கள் தேசத்தை காக்கும் உன்னத பணிக்காக உங்கள் குடும்பங்களை பிரிந்து உங்கள் உயிரையும் பணையம் வைத்து சேவையாற்றுகிறீர்கள். இப்பணியில் பல்வேறு விதமான அழுத்தங்கள் உள்ளன. எனவே, உங்கள் செயல் திறனிலும், வாழ்வை உணரும் அனுபவத்திலும், யோகா அளப்பரிய மாற்றத்தை உருவாக்கும்” என கூறினார்.
தெற்கு பிராந்திய தரைப்படையின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் திரு. அஜய் குமார் சிங் அவர்கள் இந்நிகழ்ச்சியை புனேவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். அப்போது, ராணுவ வீரர்களின் மன அழுத்தத்தை கையாளுவதில் யோகா எப்படி உதவும் என்பது குறித்து பேசினார். மேலும், இம்முயற்சியில் பங்கெடுத்துள்ள ஈஷாவிற்கு நன்றியும் கூறினார்.
முதல்கட்டமாக, சென்னை, பெங்களூரு, செகந்தராபாத், மும்பை, புனே, அகமதாபாத், குவாலியர், ஜான்சி உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்ற யோகா வகுப்பு இன்று தொடங்கியது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்படும் ராணுவ வீரர்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கோவை ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்றுநராகும் பயிற்சி அளிக்கப்படும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









