வாய்விட்டு சிரியுங்கள். நோயை விரட்டுங்கள் – உலக சிரிப்பு நாள் (World Laughter Day).

உலக சிரிப்பு நாள் (World Laughter Day) மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். இத்தினம் முதல் முதலாக ஜனவரி 10 1988ல் கொண்டாடப் பட்டது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. ஆனால், இந்த இயந்திர உலகில் நமக்கும் சிரிக்க நேரமில்லை மற்றவர்களைச் சிரிக்க வைக்கவும் நேரமில்லை என்பது தான் உண்மை. எனவே, ஆண்டுதோறும் உலக சிரிப்பு தினம் என்ற ஒன்று கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் முடிந்தளவு மக்கள் ஆங்காங்கே ஒன்றாகக் கூடி சிரித்து மகிழ்கின்றனர். இத்தனைக்கும் இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா என்பவர்தான் ஆரம்பிச்சு வைத்தார். இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் ‘லாப்டர் யோகா இயக்கத்தைத் (Laughter Yoga Moveement) தொடங்கியவர். இப்போ மதம், இனம் தாண்டி, லாப நோக்கம் எதுவும் இன்றி இத்தினம் சந்தோஷமாக கொண்டாடப்படுகிறது.

முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனர். இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் 2000ம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது. தற்போதுஉலகம் முழுவதும் லாப்டர் கிளப்கள் உருவாக்கப்பட்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இதற்கேன 6000க்கும் மேற்பட்ட கிளப்கள் செயல்படுகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடும் போது, இன்றைக்கு மன அழுத்தம் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த அழுத்தம் சோம்பேறித்தனத்தை உருவாக்கி விடுகிறது. மேலும், அது தொடர்ந்தால் 70 முதல் 80 சதவீத நோய்கள் உருவாக அதுவே காரணமாக இருக்கிறது.

அதுவும் குறிப்பாக, புற்று நோய் மற்றும் இருதய நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. உடலில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து மந்தமாக்கிறது. இவற்றிலிருந்து விடுபட சிரிப்பு மாமருந்தாக இருக்கிறது. நன்றாக வாய் விட்டு சிரிக்கும் மனிதன் ஆரோக்கியமானவனாகவும் இருக்கிறான். அவனை விட்டு எதிர் மறை எண்ணங்கள் பறந்து போய்விடுகின்றன என்பது எதற்த்தமாகும். சிரிப்பு என்பது ஒரு யோகக் கலையாகக் கூட சொல்லலாம். இவை, உடம்புக்கும் மனதிற்கும் நல்லதாகும். ஆராய்ச்சியாளர்கள் சிரிப்பு ஒரு சிறந்த மருந்து என்று கண்டறிந்திருக்கிறார்கள். சிரிக்கும் போது,முழு உடலுக்கும் நன்மை விளைகிறது. நுரையீரலுக்கு பயிற்சி கிடைக்கிறது. உமிழ்நீரில் கிருமிகளை எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. வயிற்றில் அல்சர் வருவதை தடுக்கும் என்சைம்மைச் சுரக்க செய்கிறது. வலிபோக்கும் நிவாரணியான என்டார்ஃபின்சையும் சுரக்கச் செய்கிறது.

சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 300-400 தடவைகள் சிரிக்கின்றன. 150 தடவைகள் கலகலவென சிரிக்கின்றன. ஆனால்,வயதாக வயதாக இது 6 தடவையாக சுருங்கி விடுகிறது. கை, கால்கள் இதர உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும், வலிமையானதாகவும் இருக்க ஜாக்கிங் போகிறோம் அல்லவா அது போல சிரிப்பு மூலம் உள் உறுப்புகளை வலிமையாக வைத்திருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு காரணமான மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பும், அவற்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். மனம் மற்றும் வாய்விட்டு சிரிப்பது மூலம் உடலில் தேங்கி இருக்கும் தேவையற்றை கொழுப்பு கரைகிறது.

”சிரிக்க உதடுகளை திறக்கும் போதெல்லாம் துக்கம் வெளியேறிவிடுகிறது..!” என்பது கவியரசர் வைரமுத்துவின் கவிதை வரிகள். ”உன் மனம் நோகும் போது சிரி… பிறர் மனம் நோகும் போது சிரிக்க வை…!” வாய்விட்டு சிரியுங்கள். நோயை விரட்டுங்கள்..! எனவே, சிரிப்போம் சிந்திப்போம் சிநேகமாக வாழ்வோம். ஒவ்வொரு தினமுமே சிரிப்பு தினமாகக் கொண்டாடுவோமே. தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!