கடலில் படகுகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஒரு வகை பந்தயப் போட்டியான இப்போட்டியில், பாய்மரங்களின் உதவியுடன் படகுகளை இயக்கி, ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வீரர்கள் போட்டியிடுவர். இப்போட்டி பல இடங்களில், குறிப்பாக மீனவ கிராமங்களில் கோயில் திருவிழாக்கள், ஆடி பொங்கல் போன்ற விழாக்களின் போது நடத்தப்படுகிறது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரை மாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடந்தது. இந்தப்போட்டியில் 24 படகுகள் கலந்து கொண்டன. ஒரு படகிற்கு ஆறு பேர் வீதம் போட்டியில் பங்கேற்றனர். கடலில் 7 நாட்டிகல் மைல் துாரம் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது.
வாண வேடிக்கையுடன் போட்டி துவங்கியது. வீரர்கள் காற்றின் வேகத்திற்கு தகுந்தவாறு படகுகளை செலுத்தினர். முதலாவதாக நம்புதாளை அம்பலம் படகும், இரண்டாவதாக ஈஸ்வரா என்பவரின் படகும், மூன்றாவதாக தொண்டி ராமா படகும் வெற்றி பெற்றன. அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன