எங்களுக்கு அடிப்படை வசதிகள் வேணும்’ – தலையில் முக்காடு போட்டு ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்.!

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் ‘வீரவனூர்’ கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.தங்கள் பகுதிக்கு குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பெண்கள் தலையில் முக்காடு அணிந்து ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், எங்களது ஊராட்சிக்கு வழித்தடம் எண் 93 என்ற பேருந்து கடந்த ஆண்டு வரை காலை 7:50 மணிக்கும் மாலை 4.50 மணிக்கு வந்து கொண்டு இருந்தது. தற்போது இந்த பேருந்து காலை 7 மணிக்கே வந்துசெல்கிறது. சில நாட்களில் பேருந்து வருவதும் இல்லை.வேறு வழித்தடத்திற்கு அந்த பேருந்து இயக்கப்பட்டு வருவதாக தகவல் சொல்லப்படுகிறது.இதனால் மாணவர்களும் பொது மக்களும் பெரிய சிரமத்திற்கு ஆளாகிறோம். மாணவர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு செல்ல இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே வழக்கம்போல் காலை 7.50 மணிக்கு அந்த பேருந்தை இயக்க வேண்டும். அது மட்டும் இன்றி எங்கள் பகுதிக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக காவிரி கூட்டிக் குடிநீர் விநியோகம் தடைப்பட்டுவிட்டது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அன்றாட கூலி வேலை செய்யும் எங்களுக்கு ஒரு குடம் ரூபாய் 12க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால் எங்களின் வாழ்வாதார மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மின்வினியோகம் தடைபட்டு ஊர் முழுவதும் இருட்டில் மூழ்கி காணப்படுகிறது. பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதனால் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். எங்கள் பகுதிக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர பலமுறை அரசு அதிகாரிகளிடமும், மக்கள் பிரதிநிதிகளிடமும் கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டங்கள் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!