இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவியுடன் நவீன முறையில் பருத்தி எடுக்கும் கருவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி வீ. தாமரைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நவீன பருத்தி எடுக்கும் கருவியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் இதனைப் பயன்படுத்துவதனால் வேலையாட்கள் கூலி, போக்குவரத்துக் கூலி முதலான செலவுகள் குறைந்து, பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்று தெரிவித்தனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு லாபம் ஈட்டுவதற்கு இக்கருவி பயன் பெறும் என்றும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். மேலும் செய்முறை விளக்கத்தின் போது பேசிய மாணவி தாமரைச்செல்வி, ” இராமநாதபுரத்தில் விளையும் பணப்பயிர்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று பருத்தி, இம் மாவட்டத்தின் தட்பவெட்ப நிலையைத் தாங்கி வளரக்கூடிய பருத்தி ரகங்களை விவசாயிகள் வளர்வித்தாலும், அதில் வருமானம் என்பது சரியாக கிடைப்பதில்லை மேலும் வயல்களில் இருந்து சப்பைகளை பறிக்க ஆட்கூலி, பஞ்சினைப் பிரித்தெடுக்க தனி ஆட்கூலி, போக்குவரத்துக் கூலி என எண்ணற்ற செலவுகள் பருத்தி விளைச்சலில் உள்ளடங்கும். இச்செலவுகளைக் குறைத்து பருத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் உயர்த்தவே, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பருத்தி எடுக்கும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை உபயோகிப்பதன் மூலம், வயல்களில் நேரடியாகவே சப்பைகளிலிருந்து பஞ்சினை எடுத்து விட முடியும். பேட்டரி மூலம் செயல்படும் இக்கருவியானது, ஒரு நாளைக்கு 150 கிலோ பருத்தி எடுக்கும் சக்தி கொண்டது. இதனை பருத்தி அறுவடைகாலங்களில் விவசாயிகள் பயன்படுத்துவதன் மூலம், பிற செலவுகளைக் குறைத்து, அதிக வருமானம் பெறலாம்”, என்றார். இதில் கிராமப்புற விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

You must be logged in to post a comment.