ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் குடிநீர் வீணாகி வருகிறது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருவாடானையில் இருந்து பாண்டுகுடிக்கு பாரதிநகர் பகுதியில் இருந்து குடிநீர் நீரேற்றம் செய்யப்படுகிறது. இந்தக் குடிநீர் குழாய் திருவாடானை, பண்ணவயல், எல்.கே. நகர், அஞ்சுகோட்டை, வாணியேந்தல், டி. கிளியூர் வழியாகச் செல்கிறது.
இதில் எல்.கே. நகர் பகுதியில் நடுச்சாலையில் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாகத் தண்ணீர் வீணாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதேபோல் டி. கிளியூர் பகுதியிலும் குடிநீர் குழாய் உடைந்து பெருமளவில் குடிநீர் பெருக்கெடுத்து அப்பகுதியில் உள்ள கண்மாயை நிரப்பி வருகிறது.
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதால், அந்தத் தண்ணீர் மீண்டும் குடிநீர் குழாய்களுக்குள் சென்று மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குடிநீர் வடிகால் வாரியத்தின் இந்த அலட்சியத்தால் பெருமளவில் குடிநீர் வீணாகி வருவதாகவும், இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மாவட்ட நிர்வாகம் விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.