எட்டயபுரம் அருகே ரணசூரன்நாயக்கப்பட்டி கிராமத்துக்கு ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லாததை கண்டித்து அப்பகுதி மக்கள் யூனியன் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
எட்டயபுரம் வட்டம் சுரைக்காய்பட்டி ஊராட்சி ரணசூரன்நாயக்கன்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் மார்க்சிஸ்ட் கிளை செயலாளர் ஜி.ராமசுப்பு தலைமையில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். அவர்கள் யூனியன் வளாகத்தில், ரணசூரன்நாயக்கன்பட்டி கிராமத்துக்கு சீராக குடிநீர் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் முருகானந்தத்திடம் கோரிக்கை மனு வழங்கினர்.
மனுவில், எட்டயபுரம் வட்டம் சுரைக்காய்பட்டி ஊராட்சியை சேர்ந்த ரணசூரன்நாயக்கன்பட்டி கிராமம். இங்கு குடிநீருக்கு சீவலப்பேரி தண்ணீரும், மற்ற பயன்பாடுகளுக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றி விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக சீவலப்பேரி குடிநீர் சரிவர விநியோகிக்கப்படாமல் பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் போராட்டம் நடத்தினோம். இந்த பிரச்சினை குறித்து கடந்த மாதம் 21-ம் தேதி எட்டயபுரம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.
ஆனால், கடந்த ஒரு மாத காலமாக சீவலப்பேரி குடிநீரும், ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படாமல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கு பல்வேறு காரணங்களை கூறுகின்றனர். இதனால் நாங்கள் துணி துவைப்பதற்கு எட்டயபுரத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. குடிநீருக்காக குடங்களை எடுத்துக்கொண்டு கிராம பெண்கள் நீண்ட தூரம் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. எனவே, ரணசூரன்நாயக்கன்பட்டி கிராமத்துக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளனர்.
இதில், மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கு.ரவீந்திரன், தாலுகா செயலாளர் வி.வேலுச்சாமி, கோவில்பட்டி நகர செயலாளர் ஆர்.முருகன், கிளை உறுப்பினர்கள் எம்.கண்ணன், எஸ்.வைரவசாமி, ஜி.லட்சுமணன், எம்.ஆவுடையம்மாள், எஸ்.பாண்டியம்மாள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி :அஹமது


You must be logged in to post a comment.